சென்னை: பெருங்களத்தூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (38). இவர் தேனாம்பேட்டையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற நிலையில், நேற்று முன்தினம் (அக்.4) வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறக் கதவை உடைத்து வீட்டில் உள்ள பீரோவில் இருந்த சுமார் 50 சவரன் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
அரசுக்குச் சொந்தமான ரூ.200 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு: சென்னை பல்லாவரம் சந்தை சாலையில் உள்ள தனிநபர் எம்.எம்.குப்தா என்பவர், 200 கோடி ரூபாய் மதிப்பிலான 1.5 ஏக்கர் அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் கம்பெனி, வீடு, படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின் பேரில், அரசு ஆக்கிரமிப்பு இடத்தை நேற்று (அக்.5) பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் சீல் வைத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் மீட்கப்பட்டது. முன்னதாக மின் இணைப்புகளைத் துண்டித்தும், வீடுகளில் இருந்த நபர்களை வெளியேற்றிவிட்டும், அந்த இடத்தில் உள்ள குப்தாவிற்குச் சொந்தமான கம்பெனி மற்றும் வீட்டிற்கு சீல் வைத்தனர்.
கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கிய சக மாணவர்கள்: சென்னை மாநிலக் கல்லூரியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவருக்கும், அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் கும்மிடிப் பூண்டியைச் சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் இடையே ரயில் ரூட்டுத்தலை யார் என்பது குறித்து அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
முதலில் இருவரின் நண்பர்களும் சேர்ந்து கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இரு தரப்பினருக்கும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டுள்ளனர்.
இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும், மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதை அடுத்து ரத்தக் காயங்களுடன் ரயில் மேடை படிக்கட்டில் அமர்ந்து கொண்டிருந்த மாநிலக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவரை போலீசார் மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு நடந்த கோஷ்டி மோதல் தகராறு குறித்து கடற்கரை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "இனி எந்த தயாரிப்பாளருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது" - கர்நாடகா விவகாரத்தில் நடிகர் சித்தார்த் வேதனை!