சென்னை: தாம்பரம் பழைய ஜி.எஸ்.டி சாலையில் ராஜா (32) - கலைவாணி (30) தம்பதி, ஒரு வாடகை வீட்டில் கீழ் தளத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கலைவாணியின் மருத்துவ சிகிச்சைக்காக அவர்களின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு வீட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளார்.
மேல் தளத்தில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் துரை என்பவர் கீழே வரும்போது அடுத்தடுத்து இரண்டு வீடுகள் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே, இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலின் அடிப்படையில் குற்றப் பிரிவு போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று, ராஜாவின் வீட்டில் உள்ளே பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. உடனே, போலீசார் ராஜாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது பீரோவில் இரண்டு சவரன் தங்க நகை வைத்ததாகவும், அவசரமாக ஊருக்கு வரும்போது 40 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய செல்போனை வீட்டில் வைத்துவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின் போலீசார் பார்த்தபோது அவர்கள் வைத்திருந்த செல்போன் மற்றும் நகைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. மேலும், மற்றொரு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது புதிதாக வாங்கி வைத்திருந்த 2 சட்டையும் 1,000 ரூபாய் பணமும் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: விவசாயி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை : சேலம் நீதிமன்றம் தீர்ப்பு
அதன் பிறகு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்ததில் பட்டப்பகலில் எந்த ஒரு பதட்டமும் இன்றி ஒருவர் நடந்து வந்து இரண்டு வீட்டில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி விட்டு, கூலாக பீடி பிடித்துக் கொண்டு நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளை அடித்த நபரை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்ற ஐடி ஊழியர்கள்: அதேபோல் பல்லாவரம், சங்கர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐடி ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பல்லாவரம் ரேடியல் சாலை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது டிப் டாப்பாக நின்று கொண்டிருந்த ஆசாமி ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓடத் துவங்கி உள்ளார். அவரை துரத்தி பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர், அவரிடம் சோதனை மேற்கொண்டபோது 100 கிராம் எடையுள்ள கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரை பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், போரூர் ஐஸ்வர்யம் தெருவைச் சேர்ந்த விஷ்ணு (27) எனவும், இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டு பகுதி நேரமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரின் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அனகாபுத்தூர் சுடுகாட்டு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர்கள் வடபழனி கே.கே நகர் பகுதியை சார்ந்த அஜய் (21) மற்றும் பூந்தமல்லி சுமித்ரா நகர் மூன்றாவது தெருவை சார்ந்த மரிய அந்தோணி செல்வம் (28 ) என தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஓரினச்சேர்க்கையாளர் என்பதை மறைத்த கணவர்: மனைவி போலீசில் புகார்!