சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிட் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பான அறிக்கை தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கும்பகோணம் லிமிட்டில் 222 ஓட்டுநர் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதில் 203 ஓட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்பலாம் எனவும் போக்குவரத்து கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல் விரைவு போக்குவரத்து கழகத்தில் 1,494 ஓட்டுநர் (Driver Cum Condutor) காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அவற்றில் 800 ஓட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்பலாம் என்றும் போக்குவரத்து கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் கும்பகோணம் லிமிட்டால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 203 ஓட்டுநர் காலிப்பணியிடங்களில், 122 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதேபோல் விரைவு போக்குவரத்து கழகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 800 ஓட்டுநர் (Driver Cum Condutor) காலிப்பணியிடங்களில், 685 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கான தேர்வு நேரடியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதேநேரம் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுதலில் குறைந்தது 18 மாதங்கள் முன் அனுபவம் இருக்க வேண்டும். முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரை, குறைந்தது 24 வயது பூர்த்தி அடைந்த நிலையிலும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மேலும் நேர்காணலின்போது செய்முறைத் தேர்வு நடத்தப்படும். அப்போது தேவையான அனைத்து ஆவணங்கள் உடன் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவை கட்டாயம் இருத்தல் வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.28ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு