தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2019ஆம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த புகாரை முதலில் மறுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பின் சிபிசிஐடி காவல் துறையினரிடம் புகார் அளித்தது.
அதனடிப்படையில், சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தேர்வு முறைகேட்டிற்கு இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் உள்பட பலரை கைது செய்துள்ளது. மேலும், முறைகேடு நடந்ததாக கூறப்படும் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேரின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியதுடன், அடுத்த தேர்வுகளில் பங்கேற்கவும் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்த விசாரணையில், குரூப் 2 ஏ, கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்தும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், குரூப் 4 தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், அழியும் மையை பயன்படுத்தியதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் பாதுகாக்க முயற்சிப்பதாகவே உள்ளது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் கடந்த 10 ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், அரசியல்வாதிகள், அரசு உயர் அலுவலர்கள் இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால் சிபிசிஐடி விசாரணை வெறும் கண்துடைப்பாகவே இருக்கும்.
அரசியல்வாதிகள், அரசு உயர்அலுவலர்களின் உதவியுடன் நடந்துள்ள இந்த முறைகேடுகள் தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டுமென்றால், இந்த வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும், கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடுகள் தொடர்பாக வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:அமெரிக்க அதிபருக்கு கோயில் கட்டிய சாமானியர்!