சென்னையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிக்கான உதவி சுற்றுலா அலுவலர் (நிலை - 2) பதவியின் 42 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 620 விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி நடத்தப்பட்டது.
இதற்கான தேர்வு முடிவுகளை தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தங்களது தரவரிசையினையும், அவர்கள் பெற்ற மதிப்பெண்களையும் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in ல் அவர்களது பதிவெண்ணை பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும்.
அஞ்சல் மற்றும் கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்பட மாட்டாது. குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் பெறப்படாவிட்டால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல.
எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குரூப் - 4 பணிக்குச் சான்றிதழ் சரியாக இல்லையென்றால் விண்ணப்பம் நிராகரிப்பு!