சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, குரூப் - 2 ஏ நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான முதன்மை தேர்வு வரும் 25-ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்வை எழுதத் தகுதியான தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்(கடவுச்சீட்டு) ஒருமுறை பதிவு செய்யப்பட்ட பதிவின் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) இணையதளத்தின் இந்த இணைப்பில் https://rb.gy/k4xd6w இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022 மே 21-ஆம் தேதி முதல் நிலை தேர்வை நடத்தியது. முதல்நிலை தேர்வு எழுதிய 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேரில், 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு நடைபெற உள்ளது.
குரூப்-2 பிரிவில் நேர்முகத் தேர்வு பதவிகளான 11 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், 2 நன்னடத்தை அலுவலர்கள், 19 உதவி ஆய்வாளர்கள், 17 சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 8 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், ஒரு சிறப்பு உதவியாளர், 58 தனிப்பிரிவு உதவியாளர்கள் என மொத்தம் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் வரும் 9 நகராட்சி பணியாளர் ஆணையர் நிலை-2 பணியிடங்கள், 291 முதுநிலை ஆய்வாளர்கள், 972 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் உள்பட 5 ஆயிரத்து 413 இடங்களுக்கான முதன்மை தேர்வு நடக்கவிருக்கிறது.
இந்த முதன்மை தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்குத் தனியாகத் தரவரிசை பட்டியலும் நேர்முகத்தேர்வு அல்லாத பகுதிகளுக்குத் தனியாகத் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தி பணியிட ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போட்டித் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு.. அரியலூர் ஆட்சியர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!