தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடங்கிய 9,398 பணியிடங்களுக்கு 2019 செப்டம்பர் 1ஆம் தேதி குருப் 4 தேர்வு நடத்தப்பட்டது.16,29,865 விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் 2019 நவம்பர் 11ஆம் தேதி வெளியிடப்பட்டு 24,260 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 5ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் அதிகப்படியாக தேர்வான தகவல் பரவியது. அதன் அடிப்படையில் விடைத்தாள்(ஓ.எம்.ஆர்.ஷூட்) ஆய்வு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம்,கீழக்கரையில் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ஜனவரி 13ஆம் தேதி தேர்வர்களை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். தேர்வர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டாலும், அவர்களின் திறனை அறியவும் எழுத்துத் தேர்வும் நடத்தினர்.
இந்த விசாரணையின் ரகசியம் முற்றிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன், செயலாளர் நந்தகுமார் மட்டுமே நடத்தி இருக்கின்றனர். தேர்வர்கள் அனைவரும் ஒரே மாதிரியான காரணத்தை கூறியுள்ளனர். அதில் சந்தேகம் அடைந்து விசாரணையை விடிய விடிய 19 மணி நேரம் நடத்தினர்.அப்போது இடைத்தரகர் மூலம் இதனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களின் விசாரணை அனைத்து வீடியோ ஆவணமாக காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வாணையம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்ததாகவும், தேர்வுக்காக தேர்வர்கள் இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவினால் விடைகளைக் குறித்துவிட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
தற்பொழுது தேர்வு முறைகேட்டில் ஈடுப்பட்ட 39 தேர்வர்களுக்கு பதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு புதியதாக தரவரிசைப் பட்டியலில் உள்ளவர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படாமல் இருப்பதால் முதல் 100 இடங்களில் தரவரிசைப் பட்டியலில் இருந்த முறைகேட்டில் ஈடுப்பட்ட 39 பேரின் பெயர்கள் நீக்கப்பட உள்ளது.
மேலும், அவர்களை தவிர ஏற்கனவே வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியல் அடிப்படையில் பணியை தேர்வு செய்தவதற்கான கலந்தாய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: குரூப் - 4 முறைகேடு எதிரொலி - விண்ணப்பத்தில் புதிய விதியமுறை