சென்னையைச் சேர்ந்த கவிதா தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தால் கடந்த 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வை ராமநாதபுரம் மையத்தில் எழுதி தலைமைச் செயலகத்தில் நிதித்துறை உதவியாளர் பணிக்குத் தேர்வானேன்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பாக 22க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் தேர்வெழுதிய ஒரே காரணத்தினால் தவறான தகவலின் அடிப்படையில் என்னையும் காவல்துறை கைது செய்யக்கூடும். அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் கடந்த 15 நாட்களுக்கு முன் எனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதால், ஆறு மாதம் கட்டாய ஓய்விலிருக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். எனவே, எனக்கு முன் பிணை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர், குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை முடிவடையாத நிலையில் முன் பிணை வழங்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து நீதிபதி, குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதால், மனுதாரருக்கு முன் பிணை வழங்க முடியாது. ஆனால் குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு காவல் துறைக்குத் தேவையான ஒத்துழைப்பை மனுதாரர் வழங்க வேண்டும். ஒத்துழைப்பு வழங்க மறுத்தால் அவரைக் கைது செய்து விசாரிப்பதா? வேண்டாமா? என விசாரணை அலுவலரே முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு - 'மேஜிக்' பேனா தயாரித்துக் கொடுத்தவர் அதிரடி கைது