2017ஆம் ஆண்டு நடந்த குரூப்-2 ஏ தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்து அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அலுலர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், இதுவரை குரூப்-2 ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் 13 நபர்கள், குரூப்-4 தேர்வில் 16 நபர்கள் என மொத்தம் 29 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைப்பட்டனர்.
மேலும், இதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை மாநகர ஆயுதப்படை காவலர் சித்தாண்டி ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார்.
இவர் குரூப்-2ஏ தேர்வில் சுமார் ஏழு தேர்வர்களிடமிருந்து 82 லட்சம் ரூபாய் வரை ரூபாய் லஞ்சம் பெற்று மற்றொரு முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமாரிடம் கொடுத்து முறைகேடாக அவர்கள் தேர்ச்சி பெற உதவியுள்ளார். இதேபோன்று, குரூப் 4 தேர்வில் 15 தேர்வர்களிடமிருந்து தலா ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று ஏழு நபர்களை முறைகேடாக தேர்ச்சி பெற உதவி புரிந்துள்ளார்.
இந்நிலையில், திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த சென்னை ஆயுதப்படை காவலர் பூபதி குரூப்-2 ஏ தேர்வில் ஐந்து தேர்வர்களிடமிருந்து சுமார் 55 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த கார்த்திக், ஜெயகுமார் ஆகியோர் சுமார் 9 லட்சம் ரூபாய் கொடுத்து குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு செய்து தற்போது எழிலகத்தில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்துவருகின்றனர். இதனால் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரியவந்ததன் அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையினர், அவரைக் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க : குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - தேர்ச்சி பெற பணம் கொடுத்த நால்வர் கைது