சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கான தற்காலிக விடைக்குறிப்புகள் 27ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2ஏமுதல்நிலை தேர்வு கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 163 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 285 பேர் தேர்வினை எழுதவில்லை.
சுமார் 9 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேர் அதாவது 84.44 விழுக்காடு பேர் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியும் தவறானவை அல்ல. கேள்விகள், மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் இல்லை. ஒவ்வொரு தேர்வின் போதும் இதுபோன்ற சர்ச்சைகள் எழுவது இயல்புதான் என்று பாலசந்திரன் தெரிவித்தார்.
தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் 27ஆம் தேதிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும். ஆட்சேபனைகளை தொிவிக்கும் போது ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பாட புத்தகங்களை மட்டுமே மேற்கோளாக காண்பிக்க வேண்டும். ஆட்சேபனைகள் குறித்து வல்லுநர்கள் குழு தேர்வுக்கான விடைகளை இறுதி செய்து அறிவிக்கும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்வி கற்பிக்கும் சண்டிகர் பல்கலைக்கழகம்!