சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் தனித்தனியாக கலந்துகொண்டனர்.
கே.எஸ். அழகிரி பேட்டி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்தி அனுமதிக்கப்படாதது குறித்த கருத்துகளை முதலமைச்சரோடு பகிர்ந்துகொண்டோம். பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து மட்டுமே அலங்கார ஊர்திகள் கலந்துகொண்டுள்ளன, இது பின்னடைவு.
முதலமைச்சரின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகுதான் மேயர், நகராட்சி தலைவர் குறித்து பேசப்படும். மாவட்ட அளவில்தான் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை. வேட்பாளர் பட்டியல் மாவட்ட அளவில்தான் வெளியிடப்படும்.
மு.க. ஸ்டாலின் உபசரிப்பு
வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் தொகுதிகளை கேட்டுப்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி விவகாரத்தில் தமிழ் தெரிந்தவர்களே செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதில், நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டி, சந்திப்பு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, “முதலமைச்சர் தேநீர் கொடுக்கச்சொன்னார். துரைமுருகன் அன்பாக பேசினார்” என்று பதிலளித்தார்.
வேல் முருகன் சந்திப்பு
இதையடுத்து வேல் முருகன் அளித்த பேட்டியில், “தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை ஒதுக்கித்தர கேட்டுள்ளோம். உங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களை எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களோடு பேசுங்கள் எனக் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை நடத்தாத இடங்களிலும் அழைத்துப் பேச கேட்டுள்ளோம்.
உங்களை சகோதரனாக பார்க்கிறேன், எல்லாம் நல்லதாக நடக்கும் என முதலமைச்சர் கூறியுள்ளார். தமிழரின் வாழ்வுரிமைக்காக சமரசமின்றி களத்தில் நின்று போராடுவதால் தமிழ் ஆர்வலர்கள் எங்களை ஆதரித்து வருகின்றனர்.
200க்கு 160 முனைப்பு காட்டும் திமுக
வட தமிழ்நாடு கட்சி என கருதாதீர்கள். போராட்டங்கள் நடத்தி அதிகமான வழக்குகளை சந்தித்த கட்சி எங்கள் கட்சி. சென்னையில் 2 இடங்களில் போட்டியிட கேட்டுள்ளோம். ரிசர்வ் வங்கி ஊழியர்கள் விவகாரம், கடிதத்தில் மேலோட்டமாக தெரிவித்து, அமைச்சரை சந்தித்தபோது வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள்” என்று கூறினார்.
இந்நிலையில் திமுக தரப்பு இதர கூட்டணி கட்சிகளுடன் வருகின்ற நாள்களில் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் 200 வார்டுகளில் 160 மேற்பட்ட வார்டுகள் திமுகவிற்கும், இதர வார்டுகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை