கரோனா வைரஸ் தொற்று பரவலால் மூடப்பட்ட கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என ஏற்கனவே, காய்கறி வியாபாரிகள் உள்ளிட்ட சங்கங்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பு எந்த நடவடிக்கைகளும் எடுக்காததால், வரும் 10ஆம் தேதி சென்னை உள்பட தமிழ்நாடு முழுமையாக அனைத்து காய்கறி சந்தைகளையும் மூடி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும் என அனைத்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா அறிவித்திருந்தார்.
இதைத்தொடந்து நேற்று (ஆக. 6) சென்னை மாநகராட்சி ஆணையர், சிஎம்டிஏ செயலாளர், காவல்துறை இணை ஆணையர் உள்ளிட்ட அலுவலர்களுடன் விக்ரமராஜா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து தெரிவித்த தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா, “பேச்சுவார்த்தை சுமுகமாக செல்வதால், அரசு நிர்வாகம் கோயம்பேடு சந்தை திறப்பு தேதியை விரைவில் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் 10ஆம் தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க...சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை தமிழ் மொழியில் வெளியிட வாய்ப்புள்ளதா? - உயர் நீதிமன்றம் கேள்வி!