2017ஆம் ஆண்டு அமைந்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அப்போது எதிரணியில் இருந்த ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
பின்னர் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு, கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவி, ஆட்சியில் துணை முதலமைச்சர் என்று உடன்படிக்கை செய்துகொண்டு ஓபிஎஸ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகினர்.
இதையடுத்து, 2018ஆம் ஆண்டு அவர்களுக்கு (11 சட்டப்பேரவை உறுப்பினர்கள்) எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், கொறடா உத்தரவை மீறியதாக இவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவைத்தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. அந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பார் என நம்புகிறோம் என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
இதையடுத்து, இந்தத் தீர்ப்பு தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகத்துக்குக் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், விளக்கம் அளிக்குமாறு ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் தனபால் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 11 எம்எல்ஏக்கள் வழக்கு: உச்ச நீதிமன்றம் முடித்துவைப்பு!