சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு பரப்புரை தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பரப்புரை பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நிகழ்வின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், “கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது.
கரோனா பீதி வேண்டாம்!
தமிழ்நாட்டில் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் ஒரு வார கால விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பீதி அடைய தேவையில்லை.
15இல் இருந்து 21 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துவருகிறது. மார்க்கெட் பகுதிகள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் இளைஞர்களை கவரும் வகையிலான பரப்புரை உக்திகளை கையாள இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை
ஒருவேளை மூன்றாம் அலை வந்தாலும் குழந்தைகளுக்கென 25 விழுக்காடு படுக்கைகள், சிறப்பு வசதிகள், நோய் தடுப்பு உக்திகளை மேற்கொண்டுள்ளோம். அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஒன்றிய அரசு தொற்று தடுப்பு தொடர்பாக அளிக்கும் அனைத்து வழிகாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்றிவருகிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் முடிந்தவரை தொற்று பாதித்த நபர்களை வீடுகளிலிருந்து வெளியேற்றி தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: ’மாஸ்க் அப் தமிழ்நாடு’ - கரோனா விழிப்புணர்வு பரப்புரை தொடக்கம்!