சென்னையின் பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பொதுப்பணித் துறை அலுவலர்கள் (கிருஷ்ணா நதிநீர் பிரிவு), கண்டலேறு-பூண்டி கால்வாயில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளனர்.
கடந்த ஆறுமாத காலமாக ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 6 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. பிறகு, பூண்டி ஏரியின் நீர் கொள்ளளவு அதன் முழு அடியை எட்டியவுடன், தமிழ்நாடு பொதுப்பணித் துறை அலுவலர்கள் கிருஷ்ணா நதிநீரை தற்காலிகமாக நிறுத்துமாறு ஆந்திராவின் நீர்ப்பாசன அலுவலர்களைக் கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து கிருஷ்ணா நதிநீரின் அளவு வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையில் கால்வாயில் பழுது ஏற்பட்டது. இது குறித்து பொதுப்பணித் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "வழக்கமாக, கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீரின் வரத்து குறைந்த நாள்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். ஆனால், கடந்தாண்டு நல்ல மழைப்பொழிவின் காரணமாக பூண்டி ஏரிக்கு நல்ல நீர்வரத்து இருந்தது.
எனவே, 154 கிமீ கொண்ட கண்டலேறு-பூண்டி கால்வாயின் அணைகள் ஒரு சில இடங்களில் பழுதடைந்து இருக்கிறது. எனவே, கால்வாயில் பராமரிப்புப் பணிகளை வெகு விரைவாக எடுக்க உள்ளோம். இதுமட்டுமல்லாமல், சென்னையின் மற்ற குடிநீர் வழங்கல் ஏரிகளான செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஏரிகளையும் கண்காணித்துவருகிறோம்" என்றார்.