தமிழ்நாட்டிலுள்ள 91 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கற்போர் உதவி மையங்கள் மற்றும் தேர்வு மையங்களை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனால் தொடங்கி வைக்கப்பட்டது.
தொர்ந்து அரசுக் கல்லூரிகளில் அமைந்துள்ள கற்போர் உதவி மையங்களில் இணையவழியில் மாணவர் சேர்க்கையினைத் தொடங்கி வைத்தும், படிப்புகளில் சேர்க்கை பெற்ற சில கற்போர்களுக்கு தானே கற்றல் முறை பாடநூல்கள் மற்றும் அடையாள அட்டையினையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், ''தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சமூகத்திலுள்ள சவால்களை எதிர்கொள்ளவும் அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் விரும்பும் கற்போர்களுக்கு திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கற்றல் முறை மூலம் உயர்கல்வியை அளிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 42 இளநிலை மற்றும் 38 முதுநிலைப் படிப்புகளும் பல்கலைக்கழக மானியக்குழுவில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் முறைசார் கல்வி முறையில் வழங்கப்படும் படிப்புகள் அனைத்தும் அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலை வாய்ப்பிற்கும் பதவி உயர்விற்கும் தகுதி பெற்றவையாகும்.
நேரடி முறையில் கல்லூரிகளில் தாங்கள் விரும்பிய படிப்புகளில் சேர்ந்து பயில விண்ணப்பம் செய்து வாய்ப்பு கிடைக்காதவர்கள், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் அதே படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும்.
ஏற்கனவே நேரடி முறையில் கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வரும் மாணவர்கள் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் திறன்சார் படிப்புகளில் சேர்ந்து தங்களின் வேலைவாய்ப்பு தகுதிகளை வளர்த்துக் கொள்ளலாம்.
இந்த படிப்புகளில் சேர்ந்து பயின்று தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழத்தால் பட்டங்கள் வழங்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கல்வி மையங்கள் மற்றும் தேர்வு மையங்களை அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அமைத்துள்ளதன் மூலம் இதுவரை கல்வி வாய்ப்புகள் கிடைக்கப் பெறாதவர்களும் கல்வி பெறுவதற்கான ஒரு அரிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் மலரை பெகாட்ரான் நிறுவனத்திடம் வழங்கிய முதலமைச்சர்