சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இரண்டாண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டினை எட்டியுள்ளது. இதில், தமிழ்நாடு அமைச்சரவையில் சில அமைச்சர்களுக்கு இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜாவுக்கு, தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் புதிய தொழில்துறை அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்ட நிலையில், தலைமைச்செயலகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில், கோப்புகளில் கையெழுத்திட்டு அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் TRB ராஜா, "முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம்.
தற்போதைய தொழில்துறை அமைச்சரின் மகத்தான பணியை நல்ல முறையில் தொடருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. டெல்டாவின் பாதுகாவலனாக இருப்பேன் என முதலமைச்சர் ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.
இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் தான் தொழில் முனைவோர்கள் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். அப்படிப்பட்ட அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு திகழ்கிறது. முதன்மையான முதலமைச்சராக ஸ்டாலின் திகழ்கிறார்.
இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தமிழ்நாடு கண்டு வருகிறது. இதற்கு காரணமாக முதலமைச்சரின் நோக்கம் மற்றும் அவருடைய பார்வை உலகளாவிய அளவில் இருக்கிறது. அனைத்து தொழில் முதலீட்டாளர்களுக்கு மத்தியிலும், நல்ல மதிப்பை மீண்டும் தமிழ்நாடு பெற்று இருக்கிறது. தொழில் துறைக்கு எந்த அளவிற்கு முன்னேற்றம் தேவையோ அந்த அளவுக்கு ஒன்றியத்துடன் இணக்கம் காட்டப்படும்.
தொழில் முதலீட்டாளர்களுக்கு, தமிழ்நாடு தான் நம்பர் ஒன் இடம் எனக் கூறும் வகையில் சவால்களை திறம்பட எதிர்கொள்வோம். கடும்பணி சுமைக்கு இடையிலேயும் முதலமைச்சரே நேரில் வந்து பார்வையிட்டு, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையையும் கம்போர்ட் ஸோனையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
கிரவுண்ட்க்கு வெளியே உட்கார்ந்து நிறைய கமெண்ட் அடிக்கலாம். ஆனால், கிரவுண்ட்டில் இறங்கி விளையாடும்போது யோசித்து விளையாட வேண்டும். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்குவது தான் மிக முக்கியம். அதற்காகவே, மாணவர்களுக்கான திறன் வளர்பயிற்சிகளை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ப படிக்கும் போதே கொடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்" என்றார்.
முன்னதாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட டி.ஆர்.பி ராஜாவுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பூங்கொத்து மற்றும் புத்தகங்களைக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "நிர்வாக காரணங்களுக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்" - முதலமைச்சர் ஸ்டாலின்!