சென்னை: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இன்று (பிப்.27) டெல்லி சென்றார். அமைச்சராகப் பதவியேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில், அவரை தமிழ்நாடு சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இன்று மாலை 3 மணியளவில் டெல்லி தமிழ்ச்சங்க நிர்வாகிகள், டெல்லி முத்தமிழ்ப் பேரவை நிர்வாகிகள் மற்றும் டெல்லி தமிழ்க் கல்விக் கழக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசவுள்ளார். அதனைத் தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் டெல்லியில் பணிபுரியும் தமிழ்நாடு கேடர் அனைத்து இந்தியச் சேவை அதிகாரிகளுடன் (All India Service Officials-TN Cadre) கலந்துரையாடுகிறார். பின்னர், இரவு 7 மணியளவில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இந்த பயணத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், அமைச்சர் உதயநிதி பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், நாளை மாலை 4 மணிக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் செயல் திட்ட அமலாக்கத்துறை சார்பாக பல்வேறு கோரிக்கைகளைப் பிரதமர் மோடியிடம் உதயநிதி முன் வைக்க உள்ளதாகத் தெரிகிறது.
அதேபோல், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரையும் உதயநிதி சந்தித்துப் பேசவுள்ளார். தமிழ்நாட்டிற்கு விளையாட்டுத்துறையில் பல்வேறு முக்கிய திட்டங்களைக் கொண்டுவருவது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாகத் தெரிகிறது.