சென்னை: ஜப்பான் நாட்டின் மருத்துவத்துறை சார்ந்த செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக, தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் குழு ஒன்று, கடந்த 5ஆம் தேதி ஜப்பானுக்கு புறப்பட்டுச் சென்றது. இக்குழு இன்று(பிப்.9) ஜப்பானின் ஹச்சியோஜி நகரத்தில் நடைபெற்ற புற்றுநோய் கண்டறிதல் தொடர்பான கலந்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது.
இதில், ஹச்சியோஜி நகர மேயர் தகாயுகி இஷிமோரி மற்றும் துணை மேயர் கியோகோ குய்ச்சி ஆகியோருடன், தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச்செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்குழுவினர், ஜப்பான் நாட்டு தேசிய புற்றுநோய் கொள்கை விவரங்கள், தேசிய- மாநில மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் நிதி ஆதாரம், தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை மருத்துவ நிபுணர்களுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளுக்கான பயிற்சி வழங்குதல் போன்றவை குறித்தும், ஜப்பான் நாட்டு புற்றுநோய் கொள்கை செயல்பாடுகளில் உள்ள சிறப்பம்சங்களை தமிழ்நாட்டில் உள்ள சிகிச்சை முறைகளில் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் ஆராய்ந்து ஒரு செயல்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சரிடம் அளிக்க உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரைவு மீது கருத்து கேட்பு - ஜவகர்நேசன்