சென்னை: தனியார் கல்லூரியில், கணக்கீட்டு அறிவியல் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில், பங்கேற்ற சட்டதுறை அமைச்சர் ரகுபதி, மாணவர்களிடம் கணினி அறிவியலின் சிறப்புகளையும், சட்டம் மற்றும் சிறை துறையில் கணினி அறிவியலின் பங்களிப்புகள் பற்றியும் எடுத்துரைத்த்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில் "11 மற்றும் 12 ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் இருக்கிறது. கணினி அறிவியல் அடிப்படையானது. கிராமத்தில் இருக்கக்கூடிய விவசாயி செல்போனில் குறுஞ்செய்தியை பார்க்கிறார் என்றால் அது கணினி அறிவியலின் தொழில்நுட்ப வளர்ச்சியாகும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட பத்து மசோதாக்களையும் ஆளுநருக்கு அனுப்பினோம். அவர் அதை திருப்பி அணுப்பிவிட்டார். அவர் என்ன காரணங்களுக்காக மசோதாவை திருப்பி அனுப்பினேன் என்று கூறியிருந்தால். அதற்கு உரிய விளக்கத்தை அளித்து இருப்போம். ஆனால் ஆளுநர் அப்போது சும்மா அனுப்பிவிட்டு தற்போது தமிழக அரசு மீண்டு அந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பிய உடன்,
அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகி உள்ள நிலையில், தற்போது அதற்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்காக, உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருப்பதாக ஒரு செய்தியை அனுப்பி இருக்கிறார்.
தன்னிடம் இருக்கக்கூடிய அதிகாரம் பறிபோய் விடுமோ? என்ற எண்ணம் ஏன் அவர்களுக்கு வருகிறது என்று தெரியவில்லை? மாநில அரசுக்கு துணைவேந்தரை நியமிக்க கூட அதிகாரம் கூடாது என்பது எந்த அடிப்படையில் நியாயம் என்று தெரியவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், ஒரு குழுவை நியமிக்கிறோம். அதில் ஆளுநரின் பிரதிநிதியும் இருக்கிறார். அரசின் பிரதிநிதியும் இருக்கிறார். சிண்டிகேட்டின் பிரதிநிதியும் இருக்கிறார். அந்த தேடுதல் குழு தான் மூன்று பேரை பரிந்துரை செய்கிறது. அதில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆளுநர் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாநில அரசு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மசோதாக்களை அனுப்பி இருக்கிறோம். சட்டப்பேரவைச் செயலாளருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது அரசின் முடிவு. விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாது” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநரும், முதலமைச்சரும் அமர்ந்து பேச வேண்டும்: மசோதாக்கள் நிலுவை வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!