சென்னை: சென்னை விமான நிலையத்தில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று(மே 14) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், மருத்துவமனையில் ஏற்படுத்தியுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள மதுரை, சேலம், கோவை செல்கிறேன்.
5 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாடு வந்துள்ளன. நாளை அல்லது நாளை மறுநாள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசிப் போடும் பணி தொடங்கும். ரெம்டெசிவிர் மருந்து இருந்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என சில மருத்துவர்கள் பொய்யான தோற்றத்தை உருவாக்கி வருவது வருத்தமளிக்கிறது. மருத்துவர்கள் அவர்களின் மனசான்றுப்படி ரெம்டெசிவிர் மருந்துகளைப் பரிந்துரைக்கவேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையில் பழுது காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி தடைபட்டுள்ளது. ஓரிரு நாளில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் உற்பத்தித் தொடங்கும். 100க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஆக்சிஜன் செறிவூட்டிகளை தன்னார்வலர்கள் வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் விரைவில் செயல்பாட்டிற்கு வந்ததும் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை குறையும்.
தனியார் மருத்துவமனைகள் கரோனா தொற்று நோயாளிகளை அனுமதிக்கும்போது போதுமான கட்டமைப்பு உள்ளதா என்பதை சரிபார்த்து நோயாளிகளை அனுமதிக்கவேண்டும். ஆக்சிஜன் வசதி இல்லாமல், மருத்துவமனைகளில் அனுமதித்து நோயாளிகளின் நிலை மோசமான பின்பு, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பும்போது அவர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: '8 இடங்களில் ஆக்ஸிஜன் சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடு' - செந்தில் பாலாஜி தகவல்!