சென்னை: இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், 2023ஆம் ஆண்டிற்காக 5வது சர்வதேச நோயாளி பாதுகாப்பு தினத்தின் தேசிய அளவிலான நிகழ்ச்சி 15 செப்டம்பர் 2023 அன்று புது தில்லியில் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 17ஆம் தேதி சர்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் (World Patient Safety Day) அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் சுய பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் (SaQushal - Patient Safety Self – Assessment Tool for Public Health Facilities) நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துவது குறித்த நடைமுறைகளை முன்னிலைப்படுத்துவதாகும்.
இந்த ஆண்டின் சர்வதேச நோயாளிகளின் பாதுகாப்பு தினத்திற்காக, கருப்பொருள் நோயாளிகளின் பாதுகாப்பிற்காக நோயாளிகளையே ஈடுபடுத்துதல் (Engaging Patients for Patient Safety) ஆகும். SaQushal என்னும் நோயாளிகளின் பாதுகாப்பு சுய மதிப்பீட்டின் கீழ் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு சான்றிதழ் ஒன்றினை, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் செப்டம்பர் 15ஆம் தேதி புதுடெல்லியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் வழங்கியுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளின் கீழ் இயங்கி வரும், அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேசிய சுகாதார அமைப்பு வள மையத்தால் (NHSRC) பரிந்துரைக்கப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியலில், நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த சுய மதிப்பீட்டை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆவணங்கள் அனைத்து தேசிய சுகாதார அமைப்பு வள மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நமது மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்காக, தேசிய தர உறுதி நிர்ணய திட்டம் (NQAS) 2015ஆம் ஆண்டிலிருந்தும் மற்றும் மகப்பேறு அறை மற்றும் கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்டம் (LaQshya) 2018ஆம் ஆண்டு முதல் சிறப்பாகவும், முக்கிய அம்சமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசால் அரசு மருத்துவமனைகளை தேசிய தர உறுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தேசிய அளவிலான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. 2023 ஆகஸ்ட் மாதத்தின் நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 491 அரசு மருத்துவ நிலையங்கள் தேசிய அளவில் (NQAS) சான்றிதழ்களும், 79 அரசு மருத்துவ நிலையங்கள் தேசிய அளவில் (LaQshya) சான்றிதழ்கள் பெற்றுள்ளன. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டில் பெறப்பட்ட தரச் சான்றிதழ்களின் எண்ணிக்கையை விட பல மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்மா உணவக சாப்பாட்டில் கிடந்த அரணை: அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்!