இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி அனைத்து வகை பள்ளிகளும் அங்கீகாரம் பெற்று இயங்க வேண்டும். அங்கீகாரமின்றி எந்த ஒரு பள்ளியும் செயல்படவில்லை என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், ஏற்கனவே அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளி எந்தவித அங்கீகாரமும் இன்றி செயல்பட்டுவந்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டம் மற்றும் ஏனைய பாடத்திட்டங்களின் கீழ் செயல்படும் அரசு உதவிபெறும், பகுதி நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ஐசிஎஸ்இ, ஐபி, சர்வதேச பள்ளிகள் வாரியம் போன்ற வாரியங்களில் இணைப்பு பெற்ற பள்ளிகள் அனைத்தும் மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தும் மாவட்ட தொடர்பு அலுவலர்களாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ள நிலையில், சட்டத்தினை மீறி அங்கீகாரமற்ற பள்ளிகள் இயங்கிவருவது முதன்மைக் கல்வி அலுவலர்களின் பணியைச் சரிவரச் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.