தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று தமிழ்நாட்டில் இரண்டாயிரத்து 396 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 254 நபர்களுக்கு கரோனா தொற்று உள்ளது கண்டிறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் 56 ஆயிரத்து 845 நபர்களுக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இன்று ஆயிரத்து 45 நபர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 38 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலத்தில் கரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் மொத்தம் 33 ஆயிரத்து 186 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் எட்டு லட்சத்து 21 ஆயிரத்து 594 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா சோதனைகள் அதிகப்படுத்துவது ஆறுதல் கொடுத்தாலும் மாநிலத்தில் நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்றுக்கு 704 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் உள்ளன. அதன்படி தமிழ்நாட்டின் இறப்பு விகிதம் 1.14 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தொடர் சோதனைகள் மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இறப்பு விழுக்காட்டினை குறைக்க முடியும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.