சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களில் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜப்பான் நாட்டின் கல்வி கற்றல் முறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்பாடு செய்தார். தற்போது இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டைத் தொடர்ந்து, தென்கொரியா நாட்டிற்கும் கல்விச் சுற்றுலா செல்ல உள்ளனர்.
முன்னதாக ஜப்பான் நாட்டின் தலைநகர் மற்றும் அங்குள்ள பள்ளிகளுக்கு கல்விச்சுற்றுலாவிற்காக தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்நாட்டில் அமைந்துள்ள கல்வி நிர்வாகங்கள், அமைப்புகள், கற்றல் முறை போன்ற பல்வேறு விவரங்கள் குறித்து மாணவர்களுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் கல்விச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர்.
இந்த கல்விச்சுற்றுலா பயணத்தில் பங்குபெற, பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக 2023-24 ஆம் கல்வியாண்டில், கல்வி இணை மற்றும் கல்விச்சார மன்ற செயல்பாடுகளுக்கான போட்டிகள் மாநில அளவில் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் விருப்பமுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் நவம்பர் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஜப்பான் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்வதற்கு தேர்வுச் செய்யப்பட்டனர். இது மட்டுமின்றி பள்ளிக் கல்வித்துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கல்வி இணைச் செயல்பாடுகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற 100 மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கு சென்றனர்.
நவ.3-ந் தேதி இரவு ஜப்பான் செல்லும் அவர்கள் நவ.9-ந் தேதி காலையில் தமிழ்நாடு திரும்புகின்றனர். முன்னதாக, சிறார் திரைப்பட விழாவில் வெற்றி பெற்று ஜப்பானுக்கு சுற்றுலாச் செல்ல தேர்வு பெற்றுள்ள 25 அரசுப் பள்ளி மாணவர்களை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 2-ந் தேதி சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஜப்பான் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்களும், தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சரும், தலைநகர் டோக்கியோவில் அமைந்துள்ள நவீன அறிவியல் தொழில்நுட்பங்களோடு உலக புகழ்ப்பெற்று விளங்கும் மிராய்கான் அருங்காட்சியகம் மற்றும் இந்திய தேசிய பள்ளிக்குச் சென்றனர்.
மிராய்கான் அறிவியல் அருங்காட்சியத்தை பார்வையிட்ட மாணவர்கள், "பல அறிவியல் சாதனைகளைப் படைத்து வரும் இந்த அருங்காட்சியத்தை நாங்கள் கண்டுகளித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அருங்காட்சியகத்தை உலகில் உள்ள பல இலட்சம் மாணவர்கள் பார்த்துச் சென்றுள்ளனர். இந்த இடம் தங்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது" எனத் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்திய தேசிய பள்ளிக்குச் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அப்பள்ளி நிர்வாகத்தினரும், மாணவர்களும் அன்போடு வரவேற்றனர். அங்கிருந்த நூலகம், வகுப்பறை மற்றும் கற்பித்தல் முறைகளைப் பற்றி அமைச்சரும், மாணவர்களும் பார்வையிட்டனர். பின்னர், கலைத் திறமைகளைப் பார்வையிட்டு அங்குள்ள மாணவர்களோடு கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து, கல்வி பயிலும் முறை குறித்து மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு தென்கொரியா நாட்டிற்கும் மாணவர்களை அழைத்துச் செல்லப்படுவர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்களின் பள்ளி செல்லாத 8 ஆயிரம் குழந்தைகள்..! கல்வி கண் திறக்க அரசு மனது வைக்க கோரிக்கை!