சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மிக்ஜாம் புயலாக உருவாகி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழையால் பாதிப்படைந்த இடங்களில் நிவாரணப் பணிகளும், சீரமைப்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கியும், அவர்களின் கோரிக்கைகளை கேட்டும் தெரிந்து கொண்டார். பின், மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “சென்னையில் வரலாறு காணாத மழையின் காரணமாக வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது, அதனால் பல பணிகள் இருக்கிறது. இதற்காக மத்திய அரசிடம் 5,000 கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளோம். இது குறித்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் இன்று பேசுகின்றனர்.
இதுவரை 75 சதவீத இடங்களில் மின்சாரம் கொடுத்துள்ளோம். இன்னும் 25 சதவீத இடங்களில் மின்சாரக் கயிறுகள் அறுந்துள்ளதால் முன்னெச்சரிக்க்கையாக கொடுக்காமல் இருக்கின்றோம். இன்று அல்லது நாளைக்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.
2015-இல் வெள்ளம் வந்தபோது, அப்போது இருந்த அதிமுக ஆட்சியில் நான்கு நாட்களுக்குப்பின் தான் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் உடனடியாக தண்ணீ்ர் குறையத் தொடங்கியது. அதிகபட்சமாக ஒரு வாரத்திலயே அனைத்தும் சரி செய்யப்படும். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், மழையால் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது.
ரூ.4 ஆயிரம் கோடிக்கு சென்னையில் பணிகள் நடந்ததால்தான் பாதிப்புகள் குறைவாக இருக்கின்றன. மழை நிற்பதற்கு முன்பே வெளி மாவட்டப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் தொடங்கின. மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டுள்ளோம். மத்திய அரசு வழங்கும் நிதியைப் பொறுத்து மழை நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
மருத்துவ முகாம்கள் அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை அறிவித்ததன் மூலம், மக்கள் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தனர். இன்னும் நான்கு ஐந்து நாட்களில் இயல்பு வாழ்க்கைக்கு சென்னை திரும்பிவிடும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தின் இரண்டாம் நாள் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது!