கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்திவரும் நிலையில் மார்ச் 31ஆம் தேதிவரை மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், கோயில்கள், திரையரங்குகள் ஆகியவற்றை மூட தமிழ்நாடு அரசு ஏற்கனவே உத்தரவிட்டது.
நேற்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட சூழ்நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இன்று காலை ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக நாளை ஆறு மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று பேசுகையில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வோருக்கும், அத்தியாவசிய பொருள்களை விற்கும் கடைகளை இயக்குவோருக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் ஒன்பது பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்