MRB Nurses:சென்னை: கரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை தமிழ்நாடு அரசு அண்மையில் பணி நீக்கம் செய்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் எம்ஆர்பி செவிலியர்கள் ஆர்ப்படாட்டத்தில் ஈடுபட்டனர். எம்ஆர்பி தேர்வு எழுதி, இட ஒதுக்கீட்டை பின்பற்றி பணியமர்த்தப்பட்ட தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என செவிலியர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து செவிலியர்களுக்கும், 18 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில், அவர்கள் சொந்த ஊர்களிலேயே பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், கரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்கள் தற்போது தெருவில் இருக்கிறார்கள் என்று கூறினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒப்பந்த செவிலியர்கள் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் பணிநியமனம் செய்யப்பட்டனர் என்றும், அம்மா கிளினிக்குகளுக்கு எம்ஆர்பி மூலம் மருத்துவர்களை பணிக்கு எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், தற்போது அனைத்து செவிலியர்களுக்கும் 14ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், அவர்கள் சொந்த ஊர்களிலேயே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மின்சார வாரியத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையா? - ராமதாஸ் கண்டனம்