சென்னை: கரோனா ஊரடங்கை முன்னிட்டு தமிழ்நாடு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தடைபட்டுவிடுமோ எனப் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், வீரர்கள் கவலையில் இருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவிட்டு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பு மக்களும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். இருப்பினும், மதுரை உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்ததைப் போல தங்களது பகுதியிலும் அனுமதியளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை, மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் விழா ஆகிய போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து அதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் ஆணையில், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று கிராமங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 கிராமங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமத்திலும், வேலூர் மாவட்டத்தில் 25 கிராமங்களிலும் வருகின்ற 14ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் விழா ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா வழிமுறைகளை பின்பற்றி போட்டிகளை நடத்த வேண்டும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மதுரையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!