தமிழ்நாட்டில் 247 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 29 அரசு நிதி உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேராவிட்டால் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 20 விழுக்காட்டிற்கு குறைவாகவே அதிகமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகிறது.
இதனால், அரசு நிதி உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவது வீண் செலவினம் எனக் கருதப்படுகிறது. தென்மண்டல தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் நிர்ணயம் செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் (அதாவது 40, 50, 80, 100) சேர்க்கை செய்யப்படுகின்றனர்.
2019-20ஆம் கல்வி ஆண்டு முதல் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமங்கள் அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கையில் 30 விழுக்காடு மாணவர்கள் சேர்ந்திருந்தால் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம்.
30 விழுக்காட்டிற்கு குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள நிறுவனங்களை 2019-20ஆம் கல்வி ஆண்டிற்கு பிறகு, 2020-21 கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கக் கூடாது. எனவே மாணவர் அரசு நிதி உதவிபெறும், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.