சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட 5 திட்டங்களில் அரசுப்பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணத் திட்டம் (free bus travel for woman in tamilnadu) அறிமுகப்படுத்தப்பட்டது.
திமுக அளித்த ஐந்து தேர்தல் வாக்குறுதிகளில் உத்தரவுகளில், இதற்காக முதலில் கையெழுத்திட்டார். இந்த மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி வெளியிட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணிக்கலாம் என்று அந்த ஆணையில் கூறப்பட்டிருந்தது.
ரூ.4,985.76 கோடி மதிப்பீட்டில் 311.61 கோடி மகளிர் பயணம்: பின்னர் இது மகளிரின் ஏகோபித்த ஆதரவு, பலதரப்பட்ட விமர்சனங்கள், எதிர்ப்புகளுக்கு இடையே 2021ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த இலவச பயணத்தில் இதுவரையில், 311.61 கோடி மகளிர்கள் பயணம் செய்த நிலையில், இதற்கான கட்டணத் தொகை ரூ.4,985.76 கோடி ஆகும்.
ரூ.288.64 லட்சத்தில் 18.04 லட்சம் திருநர்கள் பயணம்: திருநர்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயண விரிவுபடுத்தப்பட்டதில், இதுவரை 18.04 லட்சம் திருநர்கள் மேற்கொண்டுள்ளனர். இதற்கான கட்டணத் தொகை ரூ.288.64 லட்சமாகும். ஏழை, எளிய பெண்களுக்கு இந்த திட்டம் பேருதவியாக அமைந்தது. வேலைக்குச் செல்லும் மகளிரால் கொண்டாடப்படும் திட்டமாக இது அமைந்துள்ளது.
75% பேருந்துகள் இயக்கம்: மாநிலத்தில் மொத்தம் இயக்கப்படும் 9,620 நகரப் பேருந்துகளில் 74.46% பேருந்துகள் மகளிருக்காக கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. 2023-24ஆம் நிதி ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் 49.06 லட்சம் மகளிர் பேருந்தில் பயணிக்கின்றனர். மொத்தம் பயணிக்கும் பயணிகளில் மகளிர் பங்கு 66.03% ஆகும். மூன்றாம் பாலினத்தவர்கள் சுமார் 3,013 பேர் நகரப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
மாதம் சுமார் ரூ.888 வரை சேமிப்பு; திட்டக்குழு ஆய்வில் தகவல்: மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினர் எம்.விஜயபாஸ்கர், கொள்கை ஆலோசகர்களுடன் இணைந்து, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து வெவ்வேறு தொழில் பிரிவுகளைச் சார்ந்த பெண் பயணிகளிடம் மேற்கொண்ட ஆய்வில், ஒரு மாதத்திற்கு ரூ.756 முதல் ரூ.1,012 வரை அவர்கள் சேமிப்பது தெரியவந்துள்ளது. சராசரியாக மகளிர் சேமிக்கும் தொகை மாதம் ரூ.888 என கணக்கிடப்பட்டுள்ளது.
ரூ.2,800 கோடி ஒதுக்கீடு: மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திற்காக அரசு 2023-24ஆம் நிதி ஆண்டில் ரூ. 2,800 கோடியை நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், திருநர்களின் பயணத்திற்கு அரசு ரூ.1.21 கோடியை ஒதுக்கியுள்ளது.
பயனாளிகள் யார்?: கல்லூரி மாணவிகள், வீட்டில் இருந்தபடியே சிறு குறு தொழில் செய்யும் இல்லத்தரசிகள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்டப் பலரும் இதில் பயனடைந்துள்ளனர். நகர்ப்புற பயனர்களை விட கிராமப்புற குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும், 39% பேர் பட்டியல் இனப் பெண்கள், 21% பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள், 18% பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் எனவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: ஜூலை 22-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்; ஆலோசனை செய்யப்படும் விவகாரங்கள் என்ன?