சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப் 04) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கேலோ இந்தியா மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 134 வீரர் – வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 2 கோடியே 24 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கிடும் விதமாக 10 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
அதன் அடிப்படையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2022 மத்தியப் பிரதேச மாநிலத்தில் 30.1.2023 முதல் 11.2.2023 வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கலந்து கொண்டன. கேலோ இந்தியா போட்டியில் ஆண்கள் தடகளப் போட்டியில் 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 7 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கபட்டுள்ளது.
மேலும், ஆண்கள் கூடைப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 12 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 9 இலட்சம் ரூபாயும், ஆண்கள் வாள்வீச்சுப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற 8 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபாயும், ஆண்கள் ஜுடோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரருக்கு உயரிய ஊக்கத் தொகையாக 1 இலட்சம் ரூபாயும், ஆண்கள் படகுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற 2 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஆண்கள் நீச்சல் போட்டியில் 1 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 4 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 13 இலட்சம் ரூபாயும் வழங்கபட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, ஆண்கள் டென்னிஸ் போட்டியில் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 4 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், ஆண்கள் பளுதூக்கும் போட்டியில் 2 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற 3 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஆண்கள் யோகாசனப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு உயரிய ஊக்கத் தொகையாக 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கபட்டுள்ளது.
இதன் தொடர்சியாக, பெண்கள் தடகளப் போட்டியில் 1 தங்கம், 5 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 6 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபாயும், பெண்கள் இரட்டையர் இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 2 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு உயரிய ஊக்கத் தொகையாக 1 இலட்சம் ரூபாயும், பெண்கள் சைக்கிளிங் போட்டியில் 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 3 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 4 இலட்சம் ரூபாயும் வழங்கபட்டுள்ளது.
மேலும், பெண்கள் வாள்வீச்சுப் போட்டியில் 4 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 4 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 4 இலட்சம் ரூபாயும், பெண்கள் மல்லர் கம்பம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு உயரிய ஊக்கத் தொகையாக 1 இலட்சம் ரூபாயும், பெண்கள் படகுப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற 6 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு உயரிய ஊக்கத் தொகையாக 2 இலட்சம் ரூபாயும், பெண்கள் நீச்சல் போட்டியில் 2 தங்கம், 5 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 4 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 7 இலட்சம் ரூபாயும் வழங்கபட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, பெண்கள் வாலிபால் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 14 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பெண்கள் பளுதூக்கும் போட்டியில் 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 4 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பெண்கள் யோகாசனப் போட்டியில் 1 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 3 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கபட்டுள்ளது.
மேலும், 64 வது தேசிய துப்பாக்கிச்சுடும் சாம்பியன்ஷிப் போட்டி 2021-ல் 4 தங்கம், 23 வெள்ளி மற்றும் 17 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 17 வீரர்கள் மற்றும் வீராங்கனைளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 68 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், 12-வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி 2022-ல் 4 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 15 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 23 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2021-ல் 3 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 3 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கபட்டுள்ளது.
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2021 -22ல் 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 6 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 13 இலட்சம் ரூபாயும், 2023-ஆம் ஆண்டிற்கான சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற எம்.பிரனேஷ்க்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபாயும், 2019-ஆம் ஆண்டிற்கான பெண்கள் சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்ற ரக்ஷித்தா ரவிக்கு உயரிய ஊக்கத் தொகையாக 3 இலட்சம் ரூபாயும் என மொத்தம் 134 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 2 கோடியே 24 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (செப் 04) 10 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்சியின்போது, 2021ல் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற "Clay Pigeon Trap" தேசிய ஜுனியர் துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக நிலா ராஜா பாலுவுக்கு வழங்கப்பட்ட உயரிய ஊக்கத் தொகையான 1 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அறிவிக்கப்பட்ட சென்னையில் துப்பாக்கிச் சுடும் தளம் அமைக்கும் பணிக்காக, தமிழ்நாடு முதலமைச்சரிடம் நிலா ராஜா பாலு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Praggnanandhaa: அடுத்த விஸ்வநாதன் ஆனந்த் நானா? - செஸ் நாயகன் பிரக்ஞானந்தாவின் பதில் என்ன?