சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையால் , நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற, நகர்புற ஏழை எளிய மாணவர்கள் , அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள், சமுதாயத்தின் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக்கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக்கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி இதற்கான பல சட்டப் போராட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு
இந்த நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா? என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை சரி செய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் குறித்தும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில், கல்வியாளர்கள், அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், கீழ்கண்டவர்கள் அடங்கிய குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
- ஏ.கே.ராஜன் (நீதிபதி ஓய்வு) (தலைவர்)
- ஜி.ஆர்.ரவீந்திரநாத் (உறுப்பினர்)
- டாக்டர் ஜவஹர் நேசன் , (உறுப்பினர்)
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, அரசு முதன்மைச் செயலாளர் (உறுப்பினர்)
- அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை (உறுப்பினர்)
- அரசு செயலாளர், சட்டத்துறை உறுப்பினர் (உறுப்பினர்)
- அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உறுப்பினர் (உறுப்பினர்)
- இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் உறுப்பினர் (உறுப்பினர்)
- கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் / செயலர், தேர்வுக் குழு உறுப்பினர்-செயலர் / ஒருங்கிணைப்பாளர் (உறுப்பினர்)
பரிந்துரை வழங்க 1 மாதம் அவகாசம்
இந்தக்குழு நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் பாதிப்புக் குறித்து உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும். இந்தக்குழுவிற்கு தேவையான வசதிகளை மருதத்துவக்கல்வி இயக்குனரகம் செய்துதர வேண்டும். மேலும் இந்தக்குழுவின் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மருத்துவக்கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழுவின் செயலாளர் செய்து தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தக்குழு தனதுப் பணியை அடுத்தவாரத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும்: எல்.முருகன்