இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "வட்டி சுமையின் காரணமாக, விற்பனைப் பத்திரம் பெறாமலிருந்த, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு, மாதாந்திர தவணை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டி ஆகியவற்றினை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை, வருடத்திற்கு ஐந்து மாதம் மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு ஏப்ரல் 15ஆம் தேதி ஆணை பிறப்பித்தது.
அரசின் இச்சலுகையினை முதற்கட்டமாக, ஒருவருட காலத்திற்கு அதாவது (26.08.2018) வரையிலும், பின்னர், இருமுறை காலநீட்டிப்பு செய்யப்பட்டு, எதிர்வரும் (31.03.2020) அன்றுடன் இச்சலுகை முடிவடைய இருந்தது.
இந்நிலையில், அரசின் இச்சலுகையினை, கால நீட்டிப்பு செய்யுமாறு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
2020ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில், மார்ச் 24ஆம் தேதி அன்று நடைபெற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது, நடப்பில் உள்ள, வட்டித் தள்ளுபடி திட்டத்தினை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறும் வகையில், இச்சலுகையினை எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய, துணை முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
துணை முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, வட்டித் தள்ளுபடி திட்டத்திற்குத் தகுதியான ஒதுக்கீடுதாரர்கள், உடனடியாக சம்மந்தப்பட்ட கோட்டம்/பிரிவு அலுவலகங்களை அணுகி, வட்டித் தள்ளுபடி நீங்கலாக, நிலுவைத் தொகையினை, ஒரே தவணையாக, எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்தி, விற்பனைப் பத்திரம் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நான்கு லட்சம் மலையாளிகள் கேரளா திரும்ப விருப்பம்!