இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விளைபொருள்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்னைகளைக் களைந்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் தற்போது செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லும்போது, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து உரிய சான்றினைப் பெற்றுச் செல்லலாம்.
விளைபொருள்களை பாதுகாத்து சேமித்திட கிடங்கு வசதி
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பயன்பாட்டிற்காக நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளைபொருள்களை இந்தக் கிடங்குகளில் 180 நாள்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிக விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விளைபொருள்களைக் கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திடலாம். கிடங்கு வாடகைக் கட்டணத்தை முதல் 30 நாள்களுக்கு செலுத்திட தேவையில்லை.
பொருளீட்டுக்கடன் வசதி
கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை அடமானத்தின் பேரில் அதிகபட்சம் 75 விழுக்காடு சந்தை மதிப்பு அல்லது 3 லட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்த அளவிற்கு பொருளீட்டுக்கடனைப் பெற்றிடலாம். கடனிற்கான கால அளவு 180 நாட்கள் ஆகும். இதற்கான வட்டி 5 விழுக்காடாகும். கடனிற்கான வட்டியை முதல் 30 நாட்களுக்குச் செலுத்திட தேவையில்லை.
பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பாதுகாத்திட குளிர்சதனக் கிடங்கு வசதி
பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடி செய்திடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் குளிர்சாதனக் கிடங்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அழுகக்கூடிய பொருள்களை இக்கிடங்குகளில் வைத்து பாதுகாத்திடலாம். மேலும், விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களிலும் குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி விளைபொருள்களைப் பாதுகாத்திடலாம். விளைபொருள்களை விற்பனை செய்தல் மற்றும் சேமித்து வைத்தல் போன்றவற்றிக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கொண்டு பயன்பெறலாம். மக்களின் நலனுக்காக அரசு அறிவித்துள்ள தடை உத்தரவினால், விவசாயிகள் யாரும் சிரமப்படக்கூடாது என்பதற்காக அரசு அறிவித்துள்ள இந்த வசதியினை அனைத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குரூடாயில் சேமிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள்