தமிழ்நாட்டில் சென்னை -சேலம் இடையே பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்காக காஞ்சிபுரம் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் 5,789 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட முதற்கட்ட பணிகள் நடைபெற்றன.
இதற்கு அம்மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எட்டு வழிச்சாலை திட்டத்தால் ஐந்து மாவட்டங்களில் உள்ள 159 கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்கள், குளங்கள், ஏரிகள், மலைகள், சுகாதார அமைப்புகள் பாதிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.
கிராம மக்கள் நிலங்களை இழந்து தவித்தனர். விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையை பிறப்பித்தது. இந்நிலையில். எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்த தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அறிவிப்பாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று தமிழ்நாடு மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்தச் சூழலில் சென்னை -சேலம் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வரும் திங்கள்கிழமை (ஜூன் 3) இது தொடர்பான விசாரணை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.