சென்னை: தீபாவளியை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பலருக்கும் பண்டிகையை சிறப்பாக கொண்டாட போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மற்ற அரசு ஊழியர்களைப் போலவே டாஸ்மாக் பணியாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஏற்கனவே அரசு அறிவித்திருந்த போனஸ் தொகையை ஏற்க மறுத்து, அனைத்து சங்கங்களும் கடந்த மூன்றாம் தேதி தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மதுவிலக்கு ஆயதீர்வைதுறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் உள்ளிட்ட 21 டாஸ்மாக் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து பல்வேறு டாஸ்மாக் பணியாளர்களின் சங்கங்களின் கோரிக்கையான 20 சதவீதம் போனஸ் தொகை உறுதி செய்து முதலமைச்சரிடம் ஒப்புதலை பெற்று தருவதாக அமைச்சர் முத்துசாமி உத்தரவாதம் அளித்திருந்தார்.
இந்நிலையில் டாஸ்மாக் பணியாளர்களின் 20% போனஸ் கோரிக்கையை தமிழ் நாடு அரசு ஏற்றுள்ளது. இதன் மூலம், கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 25,824 டாஸ்மாக் பணியாளர்கள் இதன் மூலம் பயனடைய உள்ளனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்.. ஓரிரு நாளில் அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பு!