சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், தற்போது 4 உறுப்பினர் பதவிகள் மட்டுமே இருக்கின்றன. அதில் ஒருவரான ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.
இதன் காரணமாக பல மாதங்களாக தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இதனால் அரசுப் பணிகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும், புதிதாக அறிவிப்புகளை வெளியிட்டாலும், அதற்கான முழுமையான பணிகளை முடிக்க முடியாத நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதற்கும் தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்களை தமிழ்நாடு அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்து இருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சைலேந்திரபாபு தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு மீண்டும் அரசுக்கு கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான பதிலை தமிழ்நாடு அரசு அளித்து, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்து உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இருப்பினும், ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை என தலைமைச் செயலக வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பொதுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யும் முடிவை அரசு எடுத்து உள்ளது. ஆனால், போதுமான அளவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாததால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் 55 ஆயிரம் பணி இடங்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறினார். இது போன்ற நிலையில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பினால் அரசுப் பணிகளுக்கு தேவையான ஆட்களை நியமனம் செய்யும் பணிகள் வேகம் பெறும் என்றும், ஆளுநர் இதற்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும் என்றும் போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: "ஆளுநர் ரவியே நீங்கள் யார்..?" - நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிர மேடையில் கர்ஜித்த உதயநிதி!