சென்னை: வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், "திருவாரூர் மாவட்டம், திருக்கண்ண மங்கை என்னும் இடத்தில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
இக்கோயிலுக்கு சொந்தமாக 400 ஏக்கர் நிலங்கள் இருந்த நிலையில், ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது ஏழு ஏக்கர் மட்டுமே கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து எல்லை வரையறை செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய கோயில் தனி அலுவலர் உத்தரவிட வேண்டும்.
ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோயிலில் இருந்து மாயமான செப்புத் தகடுகளை கண்டுபிடித்து மீட்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கில் காணாமல் போனதாகக் கூறப்படும் செப்புத் தகடுகள் எங்கு உள்ளன என்பது குறித்து இன்று (ஆகஸ்ட் 4) தெரிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், காணாமல் போனதாகக் கூறப்படும் செப்புத் தகடுகள், புராதான பொருளாக அறிவிக்கப்பட்டு நாகை மாவட்டம், அறநிலையத்துறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து,கோயிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து ஐந்து வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏழு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: 'கோயில்களுக்கு தானம் வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களை தாக்கல் செய்க'