கரோனா தொற்று பரவுவதைத் தடுத்திட தமிழ்நாடு அரசின் சார்பில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அரசு, தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாளை (20.04.2021) முதல் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக (எஸ்இடிசி) பேருந்துகள் பகல் நேரத்தில் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து குறுகிய, தொலைதூர ஊர்களுக்கும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிற பேருந்துகள், அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்குள் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படாது எனவும் போக்குவரத்து துறை கூறியுள்ளது.
விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் பேருந்து நிலையக் கட்டுப்பாட்டு அலுவலகத்தை அணுகி தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயணத் தேதியை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த பயணிகள் ஆன்லைனில் பயணக்கட்டணத்தை திரும்பப்பெற வசதி செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமையில் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கும் இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இரவு ஊரடங்கினை பின்பற்றி அதிகாலை நான்கு மணி தொடங்கி இரவு பத்து மணி வரையிலும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.