பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், ”2019-20ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 8, 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரசுத் தேர்வுகள் சிறைச்சாலை வளாகத்திலேயே நடத்தப்பட்டுவருகின்றன.
அரசின் இந்தச் செயலுக்கு மேலும் மெருகூட்டும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கண்டறியப்பட்டுள்ள முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கிட பள்ளிக் கல்வித் துறையின் மூலம் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் ரூ.14.60 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரின் இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், எழுதப் படிக்கத் தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது என பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் சிறைச்சாலையில் உள்ள சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவினை கற்பிப்பதற்கான பணி தொடங்கியுள்ளது.