சென்னை : கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி சென்னை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை நீர் தேங்கி, சாலைகளில் மழைநீர் வெளியேற முடியாமல் இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு சாலையில் தேங்கியிருந்த நீரை உடனடியாக வெளியேற்றக்கூடிய வகையில் அனைத்துப் பணிகளையும் முடுக்கிவிட்டு ஆய்வு செய்தார். நகரின் பெரும்பாலான இடங்களில் ஓரிரு நாட்களில் மழை நீர் வெளியேறும் நிலையில் தியாகராய நகர்ப் பகுதிகளில் மட்டும் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட 'ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால்' நடைபாதை மேடையை உயர்த்தியும், மழைநீர் வெளியேறக் கூடிய கால்வாய்களை உடைத்தும் சேதப்படுத்தியதால் தான் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் காரணமாக, மழை நீர் சாலைகளில் தேங்கி இருப்பதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் டேவிதார் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்