டெல்லி: தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளதாகவும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்து வருவதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
ஆளுநர் ஆர்.என் ரவி செயல்பாடுகளால் தமிழக அரசு அதிருப்தியை அடைந்து வருவதால் இருவருக்கும் இடையேயான மோதல் தொடர் கதையாகி வருகிறது. சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் கால தாமதம் செய்து வருகிறார் எனவும் மேலும் 25 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அலைக்கழிப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதனால் ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் ஒப்புதல் வழங்க வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு அவசர கால மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.