சென்னை மாநகராட்சியில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டு பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. அதுமட்டுமன்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து இயற்கை உரத்திற்கு தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படுகிறது.
சென்னையில் தற்போது 60 சதவீதம் மக்கள் மட்டுமே குப்பையை தரம் பிரித்து வழங்குகின்றன. இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உருவாக்கியது. இதன்படி பொது இடத்தில் குப்பை கொட்டுவதற்கு அபராதம், குப்பையை உருவாக்குபவர்கள் இடமிருந்து கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு 10 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு 1000 முதல் 5000 ரூபாய், நட்சத்திர விடுதிகளுக்கு மாதமொன்றுக்கு 300 முதல் 3000 ரூபாய் வரையும் தியேட்டர்களுக்கு 750 முதல் 2000 ரூபாய் வரையும், அரசு அலுவலகங்களுக்கு 300 முதல் 3000 ரூபாய் வரையிலும், தொழில் உரிமம் பெற்ற பல்வேறு கடைகள் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம் உள்ளிட்டவற்றுக்கு 2000 ரூபாய் முதல் 4000 ரூபாய், தனியார் பள்ளிகளுக்கு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி குப்பையை பொது இடத்தில் கொட்டுபவர்களுக்கு ரூ. 500, தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 5000, கட்டுமான கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால் ரூ. 2000 முதல் ரூ. 5000, குப்பையை எரித்தால் ரூ. 500 முதல் ரூ. 1000 அபராதம் விதிக்க இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளுக்கு தற்போது அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: திடக்கழிவுகளை உருவாக்குபவர்களே அதற்கு பொறுப்பு - சென்னை மாநகராட்சி