சென்னை: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் மாநில வாரியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இது போன்ற கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நேற்றைக்கு கர்நாடக மாநிலத்திற்கும் இன்று கேரள மாநிலத்திற்கும் நாளை தமிழகத்திற்கும் நடைபெறுகின்றது.
வருகின்ற 2024ஆம் ஆண்டு தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது அதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி கலந்து பேசுவதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகின்றது. இது நல்ல முன்முயற்சி. மிகவும் ஆரம்பத்திலேயே இந்த முயற்சியை எடுத்து இருக்கின்றார்கள். இது நல்ல பலனைத் தரும் என எதிர்பார்க்கின்றோம்.
நிச்சயமாக கடந்த முறையைவிட இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து தலைமையிடம் கேட்கப்படும். அரசியல் ரீதியாக இரண்டு பிரச்னைகள் இருக்கின்றன. மோடி அரசாங்கம் கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்று எந்தத் திட்டத்தையும் வழங்கவில்லை.
ஒன்பது சதவீதத்துக்கும் மேல் தமிழகம் மத்திய அரசுக்கு வரி செலுத்துகின்றது. ஆனால் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவாகவே அவர்கள் நமக்கு வழங்குகின்றனர். இதில் கூட்டாட்சி என்று பேசுவதில் எந்த பொருளும் கிடையாது. எல்லா மாநிலத்திற்கும் எந்த விகிதாச்சார அடிப்படையில் நிதி வழங்கப்படுகின்றதோ அதேபோல் நமக்கும் வழங்க வேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு மட்டும் 10 எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளை வழங்கி அதற்கான பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. ஆனால், தமிழகத்திற்கு ஒரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை கூட வழங்கவில்லை.
தமிழகத்தின் மக்கள் தொகைக்கும், தமிழகத்தின் சாலைகளுக்கும், மக்கள் கட்டும் மத்திய வரிக்கும் ஏற்ப தரமான சாலைகளை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை. எல்லாம் பழைய நிலையிலேயே சேதம் அடைந்து இருக்கின்றது.
கூட்டாட்சி தத்துவத்தை மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கேலிக்கூத்தாக்கிவிட்டது. இதுகுறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அரசியல் கட்சிகளை உடைப்பது, அப்படி உடைக்க முடியாத கட்சிகளுக்கு தொந்தரவு தருவது போன்ற செயல்களை அவர்கள் செய்கின்றார்கள்.
மகாராஷ்டிராவில் பாஜகவின் நண்பர்களாக இருந்த சிவசேனாவை இரண்டாக பிரித்து பெரிய சேதத்தை ஏற்படுத்தினர். அதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து இருக்கின்றார்கள். இங்கு திமுகவை அவர்களால் உடைக்க முடியவில்லை, ஆகையால் இங்கிருக்கும் அரசுக்கு தொந்தரவு கொடுக்கின்றனர்.
மணிப்பூரிலும், ஹரியானாவிலும் மதக் கலவரத்தை தூண்டிவிட்டு இருக்கின்றார்கள். தேர்தலை மையமாக வைத்து அவர்கள் செய்யும் செயல் தான் இது. இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் முதல் இரண்டு கூட்டங்களை விட அதிக பலனும் முக்கியத்துவமும் தரும் என நம்புகிறோம்.
மணிப்பூர், ஹரியானா கலவரம் எல்லாம் ஆர்எஸ்எஸ் மத வெறியைத் தூண்டி விட்ட காரணத்தால் அப்பாவி மக்கள் இதற்கு பலியாகின்றனர். எப்பொழுதுமே ஆர்எஸ்எஸ், பிஜேபி-யின் எண்ணம் இதுதான்.
சுதந்திரம் அடைந்த பின்பு பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் கலவரத்தை தூண்டி விட்டனர். அதனை மகாத்மா காந்தி சரி செய்தார். தற்போது மணிப்பூரில் கலவரத்தை தூண்டிவிட்டனர். அதனை ராகுல் காந்தி சென்று சரி செய்வார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் மத்திய அரசுக்கு உரிமை! மாநில அந்தஸ்துக்கு நேரு எதிர்ப்பு... அமித் ஷா காரசார விவாதம்!