காங்கிரஸ் அறக்கட்டளையில் முறைகேடு நடந்திருப்பதாக தொடர்ந்து பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைமைக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் வார்த்தைப் போர் நடைப்பெற்று வருகின்றது.
பாஜக தலைமை இருக்கும் கமலாலயம் மதிப்பு ரூ. 30 கோடி எனவும், அதை 3 கோடி ரூபாய்க்கு மிரட்டி வாங்கியுள்ளனர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், எதை அடிப்படையாக வைத்துக் கொண்டு கமலாலயம் மதிப்பு ரூ.30 கோடி என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார் என தெரியவில்லை. ரூ.30 கோடிக்கு கமலாலயத்தை கே.எஸ்.அழகிரி வாங்கிகொள்ள தயாரா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ரூ. 30 கோடி கொடுத்து கமலாலயத்தை வாங்க நான் தயாரா என்று பாஜக மாநில தலைவர் முருகன் கேட்டுள்ளார். 20 ஆயிரம் கோடி கொடுத்து காமராஜர் அறக்கட்டளையை முருகன் வாங்குவார் என்றால் நான் 30 கோடி ரூபாய் கொடுத்து கமலாலயத்தை வாங்குகின்றேன்.
முருகன் எவ்வளவு கோடி கொடுத்தும் வாங்க முடியும், காரணம் அவர்களிடம் பி.எம் கேர் ஃபண்ட் உள்ளது. எங்களிடம் அவையெல்லாம் இல்லை, காமராஜர் விட்டு சென்ற நேர்மையும், எளிமையும்தான் இருக்கின்றது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழும், திருக்குறளும் திமுகவின் குடும்ப சொத்தல்ல’ - எல். முருகன்