சென்னை: திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த சில முக்கியமான திட்டங்களை "முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்" என்று வகைப்படுத்தி, அவை செயல்படுத்தப்படும் விதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. "முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்" குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் 5 கட்டங்களாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி உள்ளார். இந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 4ஆம் தேதி) ஆறாவது கட்டமாக 'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இன்று காலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
குறிப்பாக, தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்திட்டத்திற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு முதல் கட்டமாக இதுவரை 79.66 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும், அடுத்தடுத்து பெறப்பட உள்ள விண்ணப்பங்களின் நிலையை சரிபார்ப்பது, விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத் தொகை முறையாக சென்று அடைய வழிவகை செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 457 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி - நியமன ஆணையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!