தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், 'தேசிய அளவில் தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. மேலும் சுமார் 4.40 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தேங்காய் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அடிப்படையில் தேங்காய் கொப்பரை விவசாய செலவுகளுடன் விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரை (சிஏசிபி), இந்திய அரசு பல்வேறு ஆதரவு விலைகளை (எம்.எஸ்.பி) அறிவிக்கிறது. மேலும் தேங்காய் கொப்பரை 2020 பருவத்திற்கு, இந்திய அரசு ஒரு கிலோவுக்கு ரூ .99.60 / - ஐ எம்.எஸ்.பி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் கஜா புயல், 2019ஆம் ஆண்டில் ருகோஸ் வைட்ஃபிளை பூச்சித்தாக்குதல் ஆகியவற்றால் கடந்த இரு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து, அறுவடை செய்யப்பட்டதை சேமித்தல் ஆகியவற்றுக்காக தென்னை விவசாயிகள் கணிசமான செலவுகளை செய்கின்றனர்.
மேலும், தற்போது கரோனா ஊரடங்கால் கூலித்தொழிலாளர்கள் பற்றாக்குறை, போக்குவரத்து தடை ஆகியவற்றால் மேலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அதன் அண்டை மாநிலங்களில் ஒரு கிலோ கொப்பரை தேங்காயின் சந்தை விலை ரூ.110 ஆக உள்ளது. இதனை கருத்தில் கொண்டால், கொப்பரை தேங்காய்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆதார விலை ரூ.99.60 போதுமானதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
நெல், ராகி, பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சாகுபடி செலவில் 150 விழுக்காடு என இந்திய அரசு நிர்ணயித்துள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எனவே தென்னை விவசாயிகளுக்கும் போதுமான ஆதார விலையை வழங்க வேண்டும். கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.99.60-லிருந்து ரூ.125 ஆக உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? காமராஜ் பளீச் பதில்!