தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் பழனிசாமி பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக லண்டன் சென்ற முதலமைச்சர், அங்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணித்தர மேம்பாடுகளை அதிகரிக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும், லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த முதலமைச்சர், அந்நாட்டு எம்பிக்களை சந்தித்து பேசினார். அப்போது, 'இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும்' தெரிவித்தார்.
இந்நிலையில், சஃபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச் - ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரியசக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் முறையை பார்வையிட்டார். அப்போது அதைச் சார்ந்த தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு, தமிழ்நாட்டிலும் அதேபோன்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின்போது, மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் முனைவர் எம்.சாய்குமார், பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.