சென்னை: தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் தண்டரையில் உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் ரூ.2.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொது வசதி கட்டடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய தொழிற்பேட்டைகளின் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள தொழிற்பேட்டைகள்:
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக,
- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தில் 67.96 ஏக்கர் பரப்பளவில் ரூ.115.07 கோடி திட்ட மதிப்பீட்டில் 2,000 நபர்கள் நேரடியாகவும், 4,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 192 தொழில் மனைகளுடன் பகுதி II ல் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், பெரியகோளப்பாடி கிராமத்தில் 57.181 ஏக்கர் பரப்பளவில், ரூ.11.82 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,800 நபர்கள் நேரடியாகவும், 4,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் 171 தொழில் மனைகளுடன் கூடிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளன.
- சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம் பகுதியில் உள்ள பெரிய சீரகப்பாடி கிராமத்தில் 56.81 ஏக்கர் பரப்பளவில், ரூ.22.22 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,000 நபர்கள் நேரடியாகவும், 2,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 79 தொழில் மனைகளுடன் கூடிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
- நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம் பகுதியில் உள்ள இராசம்பாளையம் கிராமத்தில் 36.80 ஏக்கர் பரப்பளவில், ரூ.9.72 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,200 நபர்கள் நேரடியாகவும், 2,500 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 107 தொழில்மனைகளுடன் கூடிய புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம், ஆலங்குடி கிராமத்தில் 36.47 ஏக்கர் பரப்பளவில், ரூ.12.41 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,200 நபர்கள் நேரடியாகவும், 2,500 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 105 தொழில் மனைகளுடன் கூடிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம், தண்டரை கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் 0.56 ஏக்கரில், 5,700 சதுர அடி கட்டட பரப்பில் வங்கி, உணவகம், மருந்தகம், நிர்வாக அலுவலகம் மற்றும் கூட்டரங்கம் போன்ற வசதிகளுடன் தொழில்முனைவோர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொது வசதி கட்டடம் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஆனந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விளையாட்டு: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை தாக்கல் - விரைவில் அவசரச் சட்டம் ?